Thursday, 3 May 2012

எழுச்சி பெறுமா புனே அணி * இன்று மும்பையுடன் மீண்டும் மோதல்

புனே:ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று புனே வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து மூன்று போட்டியில் தோற்றுள்ள கங்குலியின் புனே அணி, சொந்த மண்ணில் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இம்முறை புனே அணி, முதல் போட்டியிலேயே மும்பை அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. அதன் பின் சொந்த மண்ணில் பங்கேற்ற முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்றது. பின் வந்த நாட்களில் சொதப்பிய இந்த அணி, கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்ற சோகத்தில் உள்ளது.இந்நிலையில் இன்று மும்பை அணியை மீண்டும் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக, புனே அணி குறைந்த ஸ்கோர் (129 ரன்கள்) தான் எடுத்தது. இருப்பினும், பவுலர்கள் டிண்டா, முரளி கார்த்திக் அசத்தியதால் வெற்றி எளிதானது. இப்போது டிண்டா காயத்தால் அவதிப்படுகிறார். முரளி கார்த்திக்கும் நிலையில்லாமல் உள்ளார்.அதேநேரம் புதிதாக அணிக்கு வந்துள்ள மைக்கேல் கிளார்க் ஆறுதல் தருகிறார். மற்றபடி மனிஷ் பாண்டே, ரைடர் போன்றவர்கள் அவ்வப்போதுதான் விளையாடுகின்றனர். கேப்டன் கங்குலி ரன்குவிப்பை வெளிப்படுத்தினாலும், இன்னும் வேகம் கூட்டினால் நன்றாக இருக்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தப்பா, பந்துகளை வீணடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்.மும்பை நம்பிக்கை:ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரை வெற்றியுடன் துவக்கிய மும்பை அணி, சச்சின் காயம், முக்கிய வீரர்கள் பார்ம் இல்லாதது, மலிங்காவின் திடீர் காயம் என, இடையில் அடுத்தடுத்த போட்டிகளில் சறுக்கியது. தற்போது சச்சின், மலிங்கா வந்துவிட்டதால் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது.9 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்றுள்ள இந்த அணிக்கு, துவக்க வீரராக களமிறங்கிய லீவி, பிராங்க்ளின், பிளிஜார்டு, ஜேக்கப்ஸ், சுமன் என யாருமே நிலையான ஆட்டத்தை தரவில்லை. டெக்கான் அணிக்கு எதிரான 100 ரன்கள் என்ற இலக்கைக் கூட சிரமப்பட்டுத்தான் மும்பை அணி எடுத்தது. ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ராயுடு மட்டும் ஆறுதல் தருகின்றனர். சச்சினின் ரன்வேகம் சற்று குறைவாகத்தான் உள்ளது.மலிங்கா அசத்தல்:பவுலிங்கில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள மலிங்கா (6 போட்டி, 15 விக்.,), அணிக்கு பெரிய பலமாக உள்ளார். இவருக்கு முனாப் படேல், ஆர்.பி.சிங்கும் கைகொடுக்கலாம். சுழலில் ஹர்பஜன் விக்கெட் வீழ்த்த துவங்கியிருப்பது நல்ல செய்தி தான்.வெற்றி வேண்டும்:புனே அணியை பொறுத்தவரையில் 10 போட்டிகளில் 4 வெற்றி மட்டும் பெற்று, 8 புள்ளிகள் தான் பெற்றுள்ளது. அடுத்து வரும் 6 போட்டிகளில் குறைந்தது 5ல் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்கலாம்.

No comments:

Post a Comment